Wednesday, October 16, 2013

உமரும் இஸ்லாமும்..

                                                    ஏக இறைவனின் திருப்பெயரால்..

   அஸ்ஸலாமு அலைக்கும் 
அவர்ஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..


உமர் பின் கத்தாப் ரழியல்லாஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சம்பவம் ஒரு உணர்ச்சி மிகுந்த வரலாறாகும்.

இஸ்லாம் என்ற விதை அவர்களின் மனதில் சட்டென விழவில்லை.இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் இடையில் நடந்த மனப்போராடம் அற்புதமானதாகும்.

இஸ்லாத்தை ஏற்காத காலத்தில் ஒருபக்கம் அவர் முஸ்லீம்களுக்கு எதிராக பல கொடுமைகளை நிகழ்த்தி வந்தாலும், இன்னொரு பக்கம்,முஸ்லீகள் இஸ்லாத்தின் மீது வைத்திருக்கும் உறுதியை நினைத்து ஆச்சார்யமடைய கூடியவராக இருந்தார்.அந்த சிந்தனை அவரின் மனதில் விழுந்த முதல் விதை என்று சொல்லலாம்.

ஒருநாள் உமர் ரழி அவர்கள் காபாவின் திரையின் உள்ளே படுத்திருந்தார்கள்.அப்பொழுது நபி{ஸல்} அவர்கள் அங்கே தனிமையில் தொழுதுக் கொண்டிருந்தார்கள். தொழுகையின்போது திருமறையிலிருந்து சூரா அல் ஹாக்கா வின் வசனங்களை ஓதிக்கொண்டிருக்கிறார்கள்.

அதை ரசித்து செவியேற்றுக் கொண்டிருந்த உமர் ரழி அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர் ஒரு சிறந்த கவிஞராக இருப்பாரோ என்று தன் எண்ணத்தில் நினைக்கிறார்கள்.
அடுத்த நொடியில் நபி ஸல் அவர்கள்...

"இது மரியாதைக்குரிய தூதரின் (மூலம் சொல்லப்பட்ட) கூற்றாகும்.
இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்"..

(69:40,41)

என்ற வசனத்தை ஓதினார்கள்.

ஆச்சர்யமடைந்த உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர் ஜோதிடர் தான் என்று நினைக்க, அப்போது நபி ஸல் அவர்கள்..


இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. (69:42,43)
என்ற வசனத்தை ஓதினார்கள்.

இந்நிகழ்வைப் பற்றி பின்னாளில் நினைவுகூர்ந்த உமர் ரழி அவர்கள்,
தனக்கு அக்கனமே இஸ்லாத்தை ஏற்று விட எண்ணம் தோன்றியதாக கூறியுள்ளார்கள்.
இருந்தாலும் மற்ற குரைஷிகளை போல, தன் மூதாதையர்கள் கொள்கையை மறுப்பதா..??! என்ற பிடிவாத எண்ணம், அவரின் மனதில் தோன்றிய சத்தியத்தை மறைத்தே வந்தது.

ஒரு பக்கம் இஸ்லாம் பற்றிய சிந்தனை,இன்னொரு பக்கம் தங்களின் முன்னோர்களின் மீதுள்ள பாசத்தால் அவர்கள் கற்று தந்த கொள்கை.இந்த இரண்டு எண்ணங்களும் மாறி மாறி இவரை போட்டி வாட்டி எடுக்கவே மிகுந்த குழப்பத்தில் இருந்த உமர் அவர்கள்,
இந்த புதிய குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் முஹம்மது தான். அவரின் கதையை முடித்தால் எல்லாம் சரியாகிடும் என்ற எண்ணத்தோடு தன் உறைவாளை எடுத்து அணிந்து கொண்டு புறப்படுகிறார்.

வழியில் நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் ரழி அவர்களின் மூலமாக உமரின் தங்கையும், மச்சானும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிந்தவுடன், மிகுந்த கோபத்தோடும் அதிர்ச்சியோடும் முதலில் அவர்களின் கதையை முடிக்கிறேன் என்ற கர்ஜனையோடு தன் தங்கையின் வீட்டை நோக்கி நடக்கிறார்.

அப்போது கப்பாப் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களின் சகோதரிக்கும் அவரின் கணவருக்கும் தன் ஏட்டிலுள்ள தாஹா எனும் அத்தியாயத்தை கற்றுக்கொடுத்து கொண்டிருந்தார்கள்.உமர் வருவதை அறிந்த கப்பாப் ரழி அவர்கள் வீட்டினுள் மறைந்து கொண்டார்கள்.உமரின் சகோதரியும் அந்த ஏட்டை
மறைத்துவிடுகிறார்கள்.எனினும் உமர் ரழி அவர்கள் வீட்டின் அருகே வரும்போதே அவர்கள் படித்துக்கொண்டிருந்த திருமறை வசங்களை செவியுற்றிருந்தார்.

உள்ளே வந்தவுடன்... நா உங்களிடமிருந்து செவியுற்ற அந்த மெல்லிய சப்தம் என்ன என்று கேட்க, நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறொன்றும் இல்லையே என்று அவ்விருவரும் பதிலளிக்கிறார்கள்.

அப்போது உமர் நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா..? என்று சப்தமாக கேட்கிறார்.அதற்கு அவரின் மச்சான்
உமரே.. சத்தியம் உன் மதம் அல்லாத வேறொன்றில் இருந்தால் அதற்கு உன் கருத்து என்ன..? எனறு கேட்க, கடுஞ்சினம் கொண்ட உமர் அவரின் மீது பாய்ந்து கடுமையாக தாக்கவும் செய்கிறார்.உமரிடமிருந்து தன் கணவனை விலக்கிவிட முயற்ச்சித்த தன் தன் சகோதரியை உமர் கன்னத்தில் அரைந்து கீழே தள்ளிவிடுகிறார்.

கோபமடைந்த உமரின் சகோதரி
உன் மார்க்கமல்லாத வேறொன்றில் சத்தியம் இருந்தாலுமா எ�ற்றுக்கொள்ளக் கூடாது..??வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை,முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன், என்று உரக்க கூறுகிறார்கள்.
தனது கோபம் பலனற்று போனதை உணர்ந்த உமர் அவர்கள் அமைதியடைந்தார்கள்.
சிறிது அமைதிக்கு பிறகு "அந்த ஏட்டை என்னிடம் தாருங்கள், நான் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்.
முதலில் மறுத்த உமரின் சகோதரி பிறகு கொடுக்கிறார்.

உமர் படிக்க துவங்குகிறார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்...தாஹா.. என ஆரம்பித்து அதன் பதினான்காம் வசனம் வரை படிக்கிறார்.

ஆஹா..இவை என்ன தூய்மையான வார்த்தைகள்.!! என்ன அழகான வசனங்கள்,!! முஹம்மதை எனக்கு காட்டுங்கள்.
எனக்கூறுகிறார்.

அப்போது உள்ளே மறைந்திருந்த கப்பாப் ரழி அவர்கள் இதைக் கேட்டவுடன் வெளியே வந்து.. உமரே நற்ச்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உங்கள் மூலமாகவோ அபுஜஹல் மூலமாகவோ இஸ்லாத்திற்கு பலம் சேர்ப்பாயாக என அல்லாஹ்விடம் கேட்டிருந்தார்கள். அது உங்கள் மூலம் நிறைவேறுகிறது என்றே நான் எண்ணுகிறேன், என்றார்கள்

பின் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸஃபா மலையின் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டதும் உமர் அந்தவீட்டை நோக்கி நடக்கிறார்.

வீட்டை நெருங்கி கதவை தட்டியவுடன், உள்ளிருந்து பார்த்தவர்கள் உமர் வாளுடன் வந்திருக்கிறார் என பதற்றத்துடன் சொல்கின்றனர்.

ஓஹ்..உமரா..அவருக்கு கதவை திறந்துவிடு.அவர் நல்லதை நாடி வந்திருந்தால் நல்லதை அவருக்கு தருவோம்.கெட்டதை நாடி வந்திருந்தால் அதையே அவருக்கு தருவோம் என ஹம்ஜா ரழி அவர்கள் கூற, அனைவரும் ஒன்றுகூடி நிற்க்கின்றார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் வீட்டின் உட்புறம் வஹி இறங்கிய நிலையில் இருக்கின்றார்கள்.

கதவு திறக்கப்படுகிறது.
உமர் உள்ளே வருகிறார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே நபி ஸல் அவர்கள் உமரின் சட்டையை பிடித்து உலுக்கியபடி
உமரே அசத்தியத்தை விட்டு வெளியேற மாட்டாயா..?வலீதுக்கு எற்பட்டது போன்ற வேதனை உனக்கும் ஏற்பட வேண்டுமா..? என்று கேட்க அமைதியாக நபியின் கையை எடுத்துவிட்ட உமர்

"அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்.வ அன்னக்க ரஸூலுல்லாஹ்.."

வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்றும்,நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்..
என்று நபி ஸல் அவர்களின் முன்னிலையில் ஷஹாதத் முழங்குகிறார்.

மகிழ்ச்சியில் ஆழ்ந்த அங்கிருந்த அனைவரும் உமரை கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்..

No comments:

Post a Comment