Thursday, January 2, 2014

வட்டி ஓர் அபாயம்..

                                          ஏக இறைவனின் திருப்பெயரால்..
அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் அருளும் பரிவும் நிலவட்டுமாக..

இறைவன் நமக்களித்த இணையில்லா அருட்கொடைதான் (இஸ்லாம் எனும்) இந்த இலகுவான வாழ்க்கை நெறி.


இலகுவான வாழ்க்கை நெறியை அருட்கொடையாக பெற்ற நம்மக்களே இதனை கடினமாக்கி கொள்ளவும் செய்கிறார்கள்..


இருப்பதை கொண்டு வாழ அருமையான வழிமுறையை சொல்லித்தரும் இம்மாரக்க சட்டத்தை மதிக்காமல் அக்கம்பக்க மக்களை பார்த்து ஆடம்பர வாழ்க்கையின் மீது ஆசை கொள்வதாலும் அல்லது முறையான இஸ்லாத்தை பின்பற்றாமல் தடம்புரண்டு வாழ்வதாலும் இன்று முஸ்லீம்களில் பலர் வட்டி என்னும் கொடுஞ்சிறையில் சிக்கி தவிக்கிறார்கள்..


செலவில் குறைந்த திருமணம் பரக்கத் நிறைந்தது என்ற நபிமொழியை மதிக்காதவர்கள் திருமணம் செய்ய வட்டியில் வீழ்கிறார்கள்..


ஆரோக்கியம்  அல்லாஹ்வின் அருட்கொடை,அதை குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவர் என்ற நபிமொழியை மறந்து, தன் ஆரோக்யத்தை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் நோயில் சிக்கியவர், அதை தீர்ப்பதற்காக வட்டியில் வீழ்கிறார்..


பின்புத்திக் கொண்ட சில ஆண்கள் பெண் வீட்டில்  பிச்சை கேட்பதாலும்,

பிச்சை கேட்கும் பெரிய இடத்திற்கு தன் பெண்ணை மணமுடிக்க விரும்புவதாலும் பெண்ணை பெற்றவர் வட்டியில் வீழ்கிறார்..

மார்க்க ஒழுக்கத்தை பார்த்து மணம்முடி என்ற நபிவழியை மறந்து அழகை பார்த்து திருமணம் செய்த சில அழகுவிரும்பிகள், அவளின் அலங்காரத்திற்காக, ஆடம்பர செலவு செய்தே வட்டியில் வீழ்கிறார்..


கணவனுக்கு கட்டுப்படாமல் ஆடம்பர

வாழ்க்கையின் மேல் ஆசைகொண்டு சில பெண்கள், புடவை நகை வீட்டிற்கான நவீன பொருட்கள் போன்றவற்றை தேவைக்கும் மீறி வாங்க கையில் காதில் கிடப்பவற்றையெல்லாம் அடகு வைப்பதை வாடிக்கையாக கொண்டு வட்டியில் வீழ்கிறார்கள்..

இப்படி வட்டியில் வீழ்வதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு.. ஆனால் இவையெல்லாம்  இறைவனிடம்  பயனற்றவை.. 


முஸ்லீம்களை மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களையும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கும் இந்த வட்டி தொழிலை முஸ்லீம்கள் கூட சிலர் செய்து வருகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.


தேவைகள் என்பது மனிதனின் பலவீனம்.

ஒருவன் பலவீனப்படும்பொழுது அவனுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர மேலும் அவனை இன்னலில் சிக்கவைப்பது மனித குணம் படைத்தவர்களின் செயலல்ல..

ஆனால் இந்த வேலையை தான் எல்லா வட்டி நிறுவனங்களும் செய்து தன்னுடைய கேவலமான குணத்தை காட்டி வருகின்றன..


மிருகங்கள்கூட தனக்கு தேவையான உணவை தானே தான் வேட்டையாடி உண்ணும்..


உழைத்து சாம்பாதிக்க வக்கில்லாமல் மனித பலவீனத்தை பயன்படுத்தி பிறர் உழைப்பில் பணம் பார்க்கும் சோம்பேறிகளை எந்த இனத்தில் சேர்ப்பது.


அவசரத்திற்காக பணம் வாங்கியவர்கள் வட்டிக்கட்ட சற்று தாமதித்தால், வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்துவது அடியாட்களை ஏவி காயப்படுத்துவது என, தான் உழைக்காத பணத்திற்காக எல்லை மீறும் வட்டி நிறுவனங்கள் ஏராளம்.

இது போன்ற அவமானங்களையும் குழப்பங்களையும் மக்கள் சந்திக்க கூடாது என்பதற்காகத் தான் வட்டி சம்பந்தமான அனைத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது..

"வட்டி வாங்குபவர்கள், கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். 

அறிவிப்பாளர் : அலீ (ரலி); 

              திர்மிதி :  5347.

வட்டித் தொழில் செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்களை ஆதரிக்கும் விதத்தில் அவர்களிடம் அவசரத்திற்காக பணம் வாங்குபவர், வட்டி கணக்கு எழுதுபவர் என அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் என இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். எனவே வட்டியில் சம்பந்தப்பட்டாலே அது அவர் சபிக்கப்படவர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

இன்னும் வட்டித் தொழில் செய்து அதில் உண்டு வாழ்ந்தவரின் நிலை மறுமையில் மிக மோசமானதாகும்.


"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:275)

எனவே அன்புக்குரிய சகோதர சகோதரிகளே..

இந்த வட்டியினால் இன்மையிலும் மறுமையிலும் இழப்புகள் மட்டுமே அதிகம் என்பதை நினைவில் கொண்டு அதனைவிட்டு விலகியிருக்க  வேண்டும்.


இன்று அல்லாஹ்வின் கிருபையால் சுன்னத்தான முறையில் வட்டியில்லா கடன் வழங்கும் பைத்துல்மால் அறக்கட்டளைகள் அதிகரித்து வருகின்றன.அதன் மூலமாக நம் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்..


அல்லாஹ் நம்மனைவருக்கும் மார்க்க உறுதியை தந்தருள்வானாக...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...

No comments:

Post a Comment